மயிலாடுதுறை: நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிரிடப்பட்டு அறுவடைப் பணிகள் நடைபெற்று வந்தது. அறுவடை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது வரை 37ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிர் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இலங்கை அருகே கரையைக் கடந்த நிலையில் இதன் தாக்கத்தால், கடந்த 4 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் அறுவடை செய்ய வேண்டிய முப்பதாயிரம் ஏக்கருக்கும் மேல் உள்ள சம்பா, தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. இதில் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர்கள் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் துளிர்விட்டு வளர்ந்து வரும் உளுந்து பயிர்கள் தண்ணீர் வடிய வழியின்றி மூழ்கியுள்ளது. மழைநீர் வயல்களில் தேங்கியுள்ளதால் உளுந்து பயிர்கள் முற்றிலும் அழுகி பாதிக்கப்படும் என்று கூறும் விவசாயிகள் உடனடியாக சேதமடைந்த உளுந்து பயிர்களை உரிய முறையில் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மேலும் வயலில் சாய்ந்த பயிர்களை தண்ணீரை வடியவைத்து இயந்திரத்தின் மூலம் தரையோடு அறுவடை செய்யும்போது உளுந்து பயிர்கள் துண்டாகி பயனற்று போகும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா நினைவு தினம் - டீ, வடை டோக்கன் கொடுத்து கூட்டத்தைச் சேர்த்த திமுக