மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சின்ன கடைத்தெருவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் ஜெயித்த நரேந்திர மோடி, மக்கள் வரிப்பணம் ரூ.5ஆயிரம் கோடி செலவு செய்து 50 நாடுகளில் சுற்றிவந்துள்ளார். பணிமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு, மக்களை பரிதவிக்க வைத்துவிட்டு கார்ப்ரேட் ஆட்சி நடத்துபவர் நரேந்திர மோடி. நான் கடந்த 25 நாட்களாக அனைத்து மக்களவைத் தொகுதிகளில் வாக்கு கேட்டுவிட்டு கடைசி நாளான இன்று எனது தாய் மண்ணில் வாக்கு கேட்க வந்துள்ளேன். மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்த இடத்தில் ராகுல் காந்தியை அமர வைக்க மக்கள் முடிவுசெய்துவிட்டனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள செ.ராமலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து மக்களவைக்கு அனுப்ப வேண்டும். தூத்துக்குடி போராட்டத்தில் 13 நபர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, கூட்டம் கூடியதால் சுட்டதாக கூறியது அதிமுக ஆட்சி. மருத்துவ கனவுகளுடன் உள்ள தமிழக மாணவர்களை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியது பாஜக. அதற்குத் துணை நின்றது அதிமுக அரசு. வருகிற, ஏப்ரல் 18 மோடிக்கு கெட் டவுட். எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்படும். விவசாய கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ள திமுக கூட்டணிக்கு வாய்ப்பளியுங்கள்.
கஜா புயல், ஒக்கி புயல், வர்தா புயல் என எந்தப் பாதிப்பின் போதும் தமிழ்நாட்டுக்கு வராத மோடி, தேர்தலின்போது மட்டுமே வந்து போகிறார். அவரே இந்த தேர்தலில் வில்லன். நரேந்திர மோடியின் அடியாட்களாக ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளனர். திமுக கூட்டணி மதசார்பற்ற கூட்டணி. அதிமுக கூட்டணி மானங்கெட்ட கூட்டணி. முதலமைச்சர் பதவியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனை என்ன என்று கேட்டால், இரண்டு ஆண்டுகளாக முதலமைச்சராக இருப்பதே சாதனைதான் என்கிறார் எடப்பாடி. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்ன ஓபிஎஸ் தற்போது வாயை திறக்காமல் உள்ளார். இவ்வாறாக முதலமைச்சருக்கே பாதுகாப்பில்லாத ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. நீங்கள் அளிக்கும் வாக்கின் மூலம் நரேந்திரமோடியை மட்டுமின்றி எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.