மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் உற்சவ மூர்த்தியை தூக்கிச் செல்ல பயன்படுவது "படிச்சட்டம் தோளுக்குகினியாள்" என்றழைக்கப்படும். இது மரத்தினால் செய்யப்பட்டு மேலே வெள்ளி தகடுகளால் கவசம் பதிக்கப்பட்டு இருக்கும்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளி தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு திருடப்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், திருடியவர்கள் கைது செய்யப்படவில்லை.
மாறாக புதியதாக படிச்சட்டம் ஒன்று வெள்ளி தகடுகளுடன் செய்து பழையது போன்றே கோயிலில் வைக்க முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர் சென்னை கேகே நகர் வெங்கட்ராமன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.
புகார் தொடர்பாக வெள்ளி தகடுகள் உரிக்கப்பட்டு திருடப்பட்டது உண்மை எனத் தெரியவந்ததது. இதையடுத்து கடந்த 1ஆம் தேதி சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர், சொத்துக்களை கையாடல், நம்பிக்கை மோசடி, அரசு ஊழியர் நம்பிக்கை மோசடியில் ஈடுபடுதல், குற்றம் நடந்து தொடர்பாக தகவல்களை தர மறுத்தல், கூட்டு சதி, கொள்ளையடித்தல், தன்னுடைய பொறுப்பில் இருக்கும் பொருள்களை திருடுதல், ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணங்களை தயாரித்தல், பொய்யாக புனையப்பட்டதை உண்மை எனப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று (பிப்.3) இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீநிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதான இவர்கள் படிச்சட்டத்தில் வெள்ளி தகடுகளை உரித்து திருடியது தெரிய வந்தது. மேலும் பழைய படிச்சட்டத்தை போன்றே வெள்ளி தகடுகள் பதித்து புதியதாக படிச்சட்டம் செய்வதற்காக மயிலாடுதுறையில் உள்ள நகைக்கடை ஒன்றில் தயார் செய்வதற்காக ஆர்டர் கொடுத்து இருந்ததும் தெரியவந்தது.
பழைய படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கி வெள்ளிகட்டிகளை கொடுத்தும், போதாததற்கு நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க செய்தும் இருப்பது காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
அந்த நகைக்கடையில் புதிதாக செய்யப்பட்ட புதிய படிச்சட்ட வெள்ளி உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு டார்ச்சர்; மூன்றாம் கண்ணில் சிக்கிய போலீஸ்!