தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மத்திய அரசு நீலப்புரட்சி என்ற ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அறிவித்தது. அதற்காக மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.200 கோடி நிதியை தமிழ்நாடு மீனவர்களுக்காக ஒதுக்கியது.
இதனை அடுத்து இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு, படகுகளை இழந்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மத்திய , மாநில அரசின் நிதி பங்களிப்புடன் 16 விசைபடகுகள் கேரள மாநிலம் கொச்சியில் உருவாக்கப்பட்டு, அது மீனவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் 50 சதவிகித மானியத்துடன் ரூ.80 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் எந்த வித இயற்கை சீற்றத்தையும் எதிர்கொள்ளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த படகிற்கு தமிழ்நாடு மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் இதன் சிறப்பம்சமாக நீண்ட நாட்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வசதியாக, இந்த படகில் ஜிபிஎஸ் கருவி, பொழுதுபோக்கு அம்சத்திற்காக டீவி, ஓய்வறை மட்டுமின்றி இயற்கை உபாதைகளை சுகாதாரத்துடன் கழிக்க நவீன வெஸ்டன் கழிவறை என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த விசைப்படகில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மீனவர்கள் கூறுவதாவது, "ராமேஸ்வரத்தை சேர்ந்த இரு படகுகள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு, தற்போது நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் அதிக அளவில் மீன்கள் கிடைத்து வருவதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், கொச்சியில் உருவாக்கப்பட்ட நீலப் புரட்சி படகுகள் கேரள கடல் பகுதியில் மீன் பிடிக்க ஏதுவாக இருப்பதாகவும், இது தமிழ்நாடு கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட வேண்டும் என மீனவர்கள் யோசனையையும் முன்வைத்துள்ளனர். அதேபோல் நீலப்புரட்சி விசைப்படகுகள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் அனைத்து கடற்பரப்பிலும் எவ்வித இடையூறுமின்றி மீன்களைப் பிடிக்கவும், மீன்களை இந்தியாவில் எந்த துறைமுகத்திலும் விற்பனை செய்ய மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தரவேண்டும்" எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.