மயிலாடுதுறை: 'தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன்' தஞ்சை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் இன்று(அக்.1) மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் செல்வராஜூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில தலைவர் மணிகண்டன், மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
பின்னர், மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குறிப்பாக களப்பணியில் பணியாற்றும் உதவியாளர்கள், கம்பியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியத்தில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதற்குப் பிறகு தரப்பட வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் 5 ஆயிரத்து 367 கேங்மேன் எடுக்கப்பட்டவர்கள். இந்த ஆட்சியில் இதுவரை நியமனம் செய்யப்படாமல் உள்ளனர்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேங்மேன்கள் தங்களது சொந்த மாவட்டத்தைவிட்டு வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். அப்படி வேறு மாவட்டங்களில் பணியாற்றுபவர்களை, அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியமர்த்த வேண்டும். பகுதிநேர பணியாளர்கள் இல்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் என்ற புதிய திட்டத்தை மின்சார வாரியத்தில் புகுத்துகிறார்கள்.
இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 3 கோடிக்கு மேல் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கும், மின்சார வாரியத்துக்கும் எந்த பயனுமில்லை. மின் திருட்டை தடுக்கவும், வருமானத்தை பெருக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பயன்படும் என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 650-க்கு கிடைக்கக்கூடிய ஸ்ட்டேடிக் மீட்டரை விட்டுவிட்டு ரூபாய் 6 ஆயிரத்து 500 கொடுத்து ஸ்மார்ட் மீட்டரை வாங்கி வைப்பதால் மின்சார வாரியத்துக்கு கடன்சுமை மற்றும் நிதி நெருக்கடி அதிகரிக்குமே தவிர்த்து, இதனால் பொதுமக்களுக்கு மின்கட்டணம் குறையாது.
அனைத்து பயனாளிகளும் ஒரே வகையான மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மேலும், இதனால் 100 யூனிட் இலவச மின்சாரமும் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பும் உள்ளது. மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை, திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மேலும் பல நிறுவனங்களாகப் பிரிப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
ஏற்கெனவே, மின்சார வாரியம் 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல நிறுவனங்களாக பிரித்தால், மின்விநியோகம் முழுவதும் தனியார் மயமாகும் நிலை உருவாகும். இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். இந்தியா முழுவதும் மின்சார சட்டம் 2003-ன்கீழ், மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், எந்த நற்பலனையும், மாநிலத்துக்கோ அல்லது மக்களுக்கோ தேடித் தரவில்லை என தெரிந்த பின்னரும், தமிழகத்தில் அந்த சட்டத்தின் தாக்கத்தின் தொடர்ச்சி தொடர்ந்து வருகிறது.
தமிழக முதல்வர் மின்சார சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஸ்மார்ட் மீட்டரை கொண்டு வரமாட்டோம் என கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: டெங்கு பரவல் எதிரொலி; தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்!