மயிலாடுதுறை: கொள்ளிடம் முதல் பொறையார் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 45ஏ நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காகக் கொள்ளிடத்திலிருந்து பொறையார் வரை உள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், மேல் முறையீட்டிற்கான விசாரணை நடத்தாமலும், குடியிருப்புகளை இடித்து சாலைப் பணிகளைச் செய்துவருவதாக நெடுஞ்சாலைத் துறை மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் ஊராட்சிக்குள்பட்ட வெள்ளக்குளம், காலக்கட்டளை பகுதியில் மரம், வீடு, நிலங்களைக் கனரக இயந்திரம் மூலம் முன்னறிவிப்புகள் ஏதுவுமின்றி கையகப்படுத்த முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.
போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்
இது குறித்து தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன், பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, தேசிய நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அலுவலர்கள் போராட்டம் நடந்த இடத்திற்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மரங்களை வெட்ட இடைக்காலத் தடை