நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள கள்ளக்குறிச்சி மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த எட்டப்பராஜனின் மகன் மாரிச்செல்வம் (36). இவர் இரும்புக்கடையில் ஊழியராகப் பணிபுரிந்தார். இவரது வீட்டின் அருகே நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(24) என்பவர் தெட்சிணாமூர்த்தி என்பவரிடம் குடித்து விட்டு, தகறாரில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தெருவில் வருவோர், போவோரை எல்லாம் அநாகரிகமாக பொதுவாக ராஜேந்திரன் திட்டியுள்ளார். இதுகுறித்து ராஜேந்திரனிடம், மாரிச்செல்வம் தட்டிக் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து மாரிச்செல்வத்தை அவரது மனைவி உமா, உறவினர்கள் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து தகராறில் ஈடுபட்ட ராஜேந்திரன், தனது நண்பர்கள் சேது (24), சூர்யா (21) ஆகிய இருவரை தன்னுடன் ஒரு இருசக்கர வாகனத்தில் கூட்டிக்கொண்டு வந்து மீண்டும் மாரிச்செல்வத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றிய நிலையில் ராஜேந்திரன், சூர்யா ஆகிய இருவரும் மாரிச்செல்வத்தை பிடித்துக்கொள்ள, சேது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிச்செல்வத்தின் வயிறு, கை , தொடை ஆகிய பகுதிகளில் பலமாக குத்தியுள்ளார்.
அதைத் தடுக்க வந்த மாரிச்செல்வனின் தந்தை எட்டப்பராஜனை தாக்கிவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடினர். மாரிச்செல்வம் உயிருக்குப் போராடிய நிலையில், அவரது உறவினர்கள் மாரிச்செல்வத்தை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மாரிச்செல்வம் உயிரிழந்தார். இதையடுத்து மயிலாடுதுறை காவல்ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று ராஜேந்திரன், சேது, சூர்யா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தற்போது மாரிச்செல்வத்தின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இறந்த மாரிச்செல்வத்திற்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மதுபோதை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது; இன்னும் எத்தனை கொலை, கொள்ளை நடக்கவிருக்கிறதோ என்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அடை மழையிலும் அசையாமல் நின்ற மது பிரியர்கள்!