தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனமான மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் 23ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் காலத்தில்,
- 1997ஆம் ஆண்டு காசி விசுவநாத தேசிகர் இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு நான்கு தீட்சைகளும் வழங்கப்பட்டன. பின்னர் அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்புகளையும்,
- 23ஆவது குருமகா சந்நிதானம் 2002ஆம் ஆண்டு மீண்டும் திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், 2002ஆம் ஆண்டு 23ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை திட்டமிட்டு கொலைசெய்ய முயற்சி நடைபெற்றது.
இதுகுறித்த விசாரணையில், இளைய சன்னிதானம் காசி விசுவநாத தேசிகரை காவலர்கள் 10ஆவது குற்றவாளியாக சேர்த்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம் நீதிமன்றங்களில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்ற காசி விஸ்வநாதர் விடுதலை செய்யப்பட்டார்.
கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறை சென்றதால், காசி விஸ்வநாதர் இளைய சன்னிதானம் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் காசி விஸ்வநாதர், மீண்டும் ஆதீன மடத்துக்கு வராமல் வெளியிலிருந்து வழக்கு தொடுத்தார்.
இறுதித் தீர்ப்பு
இந்நிலையில், 2012ஆம் ஆண்டு 23ஆவது குருமகாசந்நிதானம் பரிபூரணம் அடைந்தார்.
ஆதீனத்தில் இளைய சன்னிதானம் நியமனம் இல்லாததால் தம்பிரான்கள் ஐந்து பேர் மட்டும் இருந்தனர். அவர்களில் மூத்த தம்பிரானாகிய மீனாட்சி சுந்தர தம்பிரானை, மற்ற நான்கு தம்பிரான்களும் ஒருமித்த கருத்தோடு தேர்வு செய்தனர்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதல் அளித்தது. அவர்,
- 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளாக பொறுப்பேற்று, தற்போது செயலாற்றி வருகிறார்.
இந்நிலையில், இளைய சந்நிதானத்தில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், தற்போதைய 24ஆவது குருமகா சந்நிதானத்தின் நியமனத்துக்கு எதிராகவும், காசி விஸ்வநாதர் தொடுத்திருந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது.
அத்தீர்ப்பில் திருக்கூட்ட அடியவர்கள் சேர்ந்து தற்போதைய ஆதீனத்தை நியமித்தது செல்லும் என்றுகூறி காசி விஸ்வநாதர் தொடுத்திருந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக ஆதீன நிர்வாகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: ` தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்டக்கோரிய வழக்கு முடித்து வைப்பு