மயிலாடுதுறை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தில் உலக புகழ்பெற்ற திருமண தடை நீக்கும் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. சிவபெருமான் கல்யாணசுந்தர மூர்த்தியாக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்துகொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என அழைக்கப்படுகிறது.
இங்கு திருமணத்தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற இக்கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கடந்த 6 ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, சுவாமி படி இறங்குதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி பின்னர் கல்யாணசுந்தரர் சுவாமிக்கு மங்கள ஸ்நானம் செய்யப்பட்டு, உற்சவ தினமான நேற்று (மே 8) கல்யாணசுந்தரர் காசி யாத்திரைக்கு திருஎதிர்கொள்பாடி எழுந்தருளல், மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம் ஆகியவை நடைபெற்றது.
கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருமணக்கோணத்தில் மணவறையில் எழுந்தருளி, பக்தர்கள் சீர்வரிசை எடுத்துவர, திருக்கல்யாண உற்சவம் மாங்கல்ய தாரணம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோயில் தலைமை அர்ச்சகர் உமாபதி சிவாச்சாரியார் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க : மருதமலை கோயில் திருக்கல்யாண நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை