மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் 14 நாள்கள் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேற்று நடைபெற்றது.
இதில், விநாயகர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளி காட்சியளித்தனர். பின்னர் கொடிக்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடியேற்றம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து விழா நாள்களில் ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு வீதி உலா செல்லாமல் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.