மயிலாடுதுறை: கத்தாரில் நடந்து வரும் சர்வதேச அளவிலான 'பிஃபா கால்பந்து போட்டியில் (FIFA World Cup 2022) பல நாட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. இதனிடையே அங்கு கால்பந்து போட்டிக்கான பிஃபா அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமின்றி, கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாடுகளின் ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டுள்ளனர். உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் பார்வை கத்தாரின் தோகா நகரை நோக்கி திரும்பியுள்ளது.
கத்தாரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக, பணிநிமித்தமாக சென்ற தமிழர்களும் அங்கு வசித்து வருகின்றனர். அதன்படி, கத்தார் நாட்டுக்கு தமிழர்களின் சார்பில் நன்றி செலுத்தும் விதமாக கத்தார் உலக கால்பந்து போட்டிக்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவையானது, 'குன் ஷாகிரான்' (Kun Shakiran - Theme Song) என்ற ஆங்கில தீம் பாடலை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை தமிழ்மகன் அவார்ட்ஸ்-ன் (Tamilmagan Awards) நிறுவனர் மயிலாடுதுறை குத்தாலத்தைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த சாம் ஜோசப் என்பவரின் பாடல் வரி மற்றும் இசையில், சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஆனந்த் அரவிந்தாக்சன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழர்கள் உருவாக்கிய 'குன் ஷாகிரான்' பாடலை அங்கீகரிக்கும் விதமாக அந்நாட்டின் அமைச்சர் மற்றும் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டது.
அத்துடன், கத்தார் மீடியா கார்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய தொலைக்காட்சியான கத்தார் டிவி மற்றும் பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ், உருது மொழி உள்ளிட்டவைகளின் வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முகநூலில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ பல ஆயிரம் லைக்குகளை அள்ளி வருகிறது.
இதையும் படிங்க: 1.5 கோடிப்பே... நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு செல்லும் முட்டைகள்: ருசிகர பின்னணி