தேனி மாவட்டம் தாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் இர்பானா ஜெனிபர் (29). முதுகலை பட்டதாரியான இவர், முகம்மது உசைன் என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
கணவரை பிரிந்த ஜெனிபர் தனது குழந்தையுடன் சென்னையில் தனியாக வசித்து வந்த நிலையில், தனியார் டியூஷன் சென்டரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார்(35) என்பவருடன் டியூஷன் சென்டரில் இர்பானாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. செல்வகுமார் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இர்பானாவின் குழந்தையை செல்வகுமார் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு செல்வக்குமார் தனது சொந்த ஊரான நெடுங்குளத்திற்கு இர்பானா ஜெனிபரை பைக்கில் அழைத்து வந்துள்ளார். அப்போது நெடுங்குளம் செல்லும் வழியில் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட மங்கைநல்லூரில் ஏற்பட்ட வாகன விபத்தில் இர்பானா ஜெனிபர் நேற்று (ஆகஸ்ட் 19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் காவல்துறையினர், இறந்தவரின் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வந்த ஜெனிபரின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜெனிபரின் சகோதரர் கூறியதாவது, "தனது தங்கை மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தபோது, செல்வக்குமார் எந்த காயமும் இல்லாமல் இருப்பது எப்படி, விபத்து ஏற்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நண்பனின் நினைவு தினத்தில், தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்திய நண்பர்கள்!