மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்த பின்னர் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் தங்களுக்கு உண்டான தலைமை மீனவ கிராமத்தை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சீர்காழியில் தலைமை மீனவ கிராமம் தேர்ந்தெடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் மீனவர்கள் பிரதிநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் 28 மீனவ கிராமத்தில் 16 மீனவ கிராமங்கள் பங்கேற்ற நிலையில், மீதம் உள்ள மீனவ கிராமங்கள் பங்கேற்கவில்லை. இதனால் தலைமை மீனவ கிராமம் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நிலவியது. இந்நிலையில் திடீரென தரங்கம்பாடி கிராமத்தை தலைமை மீனவர் கிராமமாக அறிவித்து, நாளை பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் சீர்காழி அருகே மடத்துக்குப்பம் மீனவ கிராமத்தில் 15 மீனவ கிராமங்களுக்கும் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் தலைமை மீனவ கிராமம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், ஒரு சார்பினர் தரங்கம்பாடியை தலைமை மீனவ கிராமமாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் மீனவ கிராமங்கள் குற்றஞ்சாட்டினார்.
இதனால் தலைமை மீனவ கிராமத்தை தேர்ந்தெடுக்க மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர். தலைமை மீனவ கிராமம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடக்காவிட்டால் சீர்காழி தாலுகாவில் உள்ள 18 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து தங்களுக்குள் ஒரு தலைமை கிராமத்தை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் மீனவ கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்த பிறகு, தலைமை மீனவ கிராமத்தை தேர்ந்தெடுப்பதில் தற்பொழுது மீனவ கிராமங்கள் இடையே பிரச்னை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தலைமை மீனவர் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரங்கம்பாடிக்கு பரிவட்டம் கட்டவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.