மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் பயணத்தின்போது அவர் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்கிறார்.
நேற்று திருவெண்காடு, திருக்கடையூர் ஆகிய கோவில்களில் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இந்நிலையில், இன்று காலை வைத்தீஸ்வரன்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி: இதைத்தொடர்ந்து அவர் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருள் ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆதீனத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு மூக்கை நுழைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும்.
இதற்கு முன் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் தருமை ஆதீனத்தில் பட்டிணப் பிரவேசங்கள் நடைபெற்று வந்தது. 500 ஆண்டுகாலம் நடைபெற்ற அந்த இந்த பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சியை வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு அதை தடை செய்ய முயற்சி செய்தது. அதை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தோம்.
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை திறந்தவெளியில் கொண்டுவந்து அடுக்கிவைத்து விற்பனை செய்ய முடியாமல் வீணானது. கொள்முதல் செய்த நெல்லையும் அரசு முறையாக பாதுகாக்கவில்லை. லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு செயலற்ற அரசாக இருந்துகொண்டு இருக்கிறது. விவசாயிகளிடம் முறையாக நெல்கொள்முதல் செய்யாதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு தேவைக்கு ஏற்ப உரங்களை வாங்கி கையிருப்பு வைக்காததால் தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் எல்கேஜி, யூகேஜி பயில வேண்டுமென அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை திமுக முடக்க நினைத்தது. ஆனால் கடும் எதிர்ப்புக்கிளம்பியதால் அரசு முடிவை மாற்றி கொண்டது.
வைத்தீஸ்வரன் கோயிலில் சுவாமி தரிசனம்: முன்னதாக சீர்காழி தாலுகாவில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவரை கோயில் சார்பில் தருமபுரம் ஆதீன கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கற்பக விநாயகர், சுவாமி, அம்பாள், செவ்வாய் மற்றும் செல்வ முத்துக்குமார சுவாமி சந்நிதிகளில் தரிசனம் செய்தார்.
வைத்தீஸ்வரன் கோயில் நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகத் திகழ்கிறது. அங்கு செல்வ முத்துக்குமார சுவாமியும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்;ஓய்வு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைப்பு