நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைக்க வசதியாக 920 மீட்டர் நீளம், 9 மீட்டர் உயரத்துக்கு கருங்கற்களை கொண்டு அலை தடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கருங்கல் அலை தடுப்பானது நிவர் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடல் மட்டத்துக்கு மேல் மூன்று மீட்டர் உயரத்துக்கு சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கருங்கல் அலை தடுப்பணையை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தரங்கம்பாடி கடற்கரையில் கருங்கல் அலை தடுப்பில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பை கணக்கிடப்பட்டு, நிவர் புயல் சேத மதிப்பில் சேர்த்து மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று விரைவில் சீரமைக்கப்படும்" என்றார். ஆய்வின்போது நாகை ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலர் லலிதா, எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
இதையும் படிங்க: 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பேரிடர் நிவாரண நிதி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு