நாகை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது இந்தப் போராட்டம் உலகளாவிய கவனத்தை பெற்றுவருகிறது.
அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று விவசாய சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், பல்வேறு எதிர்க்கட்சிகள், சேவை அமைப்புகள் ஆகியவை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் விவசாயிகளுடன் இணைந்து நாகை மாவட்டம் தோப்புத்துறையில் டிராக்டர், மாட்டு வண்டிகளுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பங்கேற்று, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.