கரோனா அச்சத்தால் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், புதுச்சேரி மாநில எல்லையான காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் தமிழ்நாடு வாகனங்களைத் தவிர மற்ற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காகக் காரைக்கால் செல்லும் நாகையைச் சேர்ந்தவர்களை மட்டும் அனுமதிக்கும் காவல் துறையினர், மருத்துவக்குழுவின் உதவியுடன் தெர்மல் மீட்டர் மூலம் பொதுமக்கள், வாகன ஓட்டிகளைப் பரிசோதித்துவருகின்றனர். மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிமாநிலப் பயணிகள் யாரேனும் வருகிறார்களா? என்பதைக் கண்டறிய சென்னை செல்லும் ஆம்னி பேருந்து பயணிகள் அனைவரும் பரிசோதனைசெய்யப்படுகின்றனர்.
இதேபோல், தமிழ்நாடு எல்லையான நாகூர் சோதனைச்சாவடியில் ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள் தெர்மல் மீட்டர் கருவி கொண்டு கரோனா கண்டறிதல் சோதனைசெய்யப்படுகின்றனர். பேருந்தில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணிந்தபடியே பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா: ஆடம்பரமின்றி எளிமையாக நடந்த 16 திருமணங்கள்