நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். எதிர்க்கட்சியினர் போராட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் என திமுக நினைத்துக்கொண்டிருக்கிறது. மும்மொழி கொள்கையை படிப்பதால் தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
மத்தியில் ஆளும் பாஜக என்றைக்கும் ஹிந்தி, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை. 22 மொழிகளில் எந்த மொழியையும் தேர்ந்தெடுத்து படிக்கலாம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் தொடங்கவுள்ளோம். வருகின்ற 25ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெறவுள்ளது" என்றார்.
பின்னர், நீட் தேர்வு எழுத வந்த மாணவியிடம் தாலியை கழட்ட வைத்தது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, இதற்கு சம்பந்தப்பட்ட மாணவியே கவலைப்படவில்லை. தேர்வு தான் முக்கியம் எனக் கூறியுள்ளார். 22 வயதிற்கு கீழ் திருமணம் செய்யக் கூடாது என சட்டம் வந்து விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு குறித்த அறிக்கையை சூர்யா மாற்றிக் கொள்வார்' - அண்ணாமலை