நாகை மாவட்டம் மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கி.மீ தூரம் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை விளைநிலங்களில் காவல்துறை உதவியுடன் பதித்துவருகிறது. இந்நிலையில், முடிகண்டநல்லூர் கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் குழாய் பதிப்பால் சேதமடைந்த நெற்பயிர்களை திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசுக் கட்சியின் தலைவருமான கௌதமன் நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயிகள், மீனவர்களை அழிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விளைநிலங்களை அழித்து குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் காவல்துறை உதவியுடன் கெயில் நிறுவனம் பயிர்களை சேதப்படுத்தி குழாய் பதிக்க அனுமதி வழங்கியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவம் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தமிழக முதலமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தேசிய மனித உரிமைகள் கழகத்திடம் புகார் அளிப்பேன் " என்றார்.
மேலும், விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் விளைநிலங்களில் குழாய் பதித்த கெயில் நிறுவனம் மீதும் பாதுகாப்பளித்த காவல்துறை மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.