நாகப்பட்டினம்: தமிழகத்தில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு சுமார் 40 வருடங்கள் கழித்து நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை மாகாணம் காங்கேசன் துறைமுகத்திற்கு (Kankesan Port) செரியாபாணி (CHERIYAPANI) என பெயரிடப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவங்க, ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், கப்பல் போக்குவரத்து சேவைக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை அக்.14-இல் பயணிகள் போக்குவரத்து சேவை மத்திய அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட உள்ளது. இக்கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடைகிறது.
கப்பலில் பயணம் மேற்கொள்ள பயண கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.6500 + 18% ஜிஎஸ்டி வரியோடு ரூ.7670 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துவக்க விழாவை முன்னிட்டு பயணக் கட்டணத்தில் 75% சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி அக்டோபர் 14-ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் 2375 +18 % வரியுடன் நபர் ஒன்றுக்கு ரூ.2803 பயணக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 35 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் சலுகை விலை அறிவிப்பால் கூடுதலாக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், நபர் ஒருவர் 50 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சலுகை விலை டிக்கெட் அறிவிப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று சிறப்பு பயிற்சி பெற்றனர். இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட 'செரியாபாணி' (CHERIYAPANI) கப்பலில் 150 பயணிகள் பயணிக்கும் வகையில், கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக் கடலில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பிருப்பதால் தற்காலிகமாக சில மாதங்களுக்கு நிறுத்தப்பட்டு மீண்டும் மார்ச் மாதம் முதல் தினந்தோறும் நாகை - இலங்கைக்கு இடையே இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.