மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வசதி சேவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள திருக்களாச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த ஆயப்பாடியில், தமுமுகவின் 172ஆவது ஆம்புலன்ஸ் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, மயிலாடுதுறை நாடளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான நிவேதா முருகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முஹம்மது சுல்தான் குடும்பத்தார் அன்பளிப்பாக அளித்த ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்த ஜவாஹிருல்லா தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து அமைச்சர் பழனிவேல் ராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு தந்திருப்பதற்கு வெள்ளை அறிக்கையே சான்று.
உண்மையை மறைப்பதற்காக திமுகவை விமர்சிக்கும் அதிமுக
அதிமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும், திமுகவை விமர்சிப்பதற்கு காரணம் அவர்களின் நிர்வாக சீர்கேடு பல்வேறு தரவுகளுடன் வெளிப்பட்டுவிட்டது என்ற உண்மையை மறைப்பதற்காக தான். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படிப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றன என்பது பற்றி தலைமை கணக்குத் தணிக்கையாளர் தெளிவான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார்.
கரோனா தொற்று காலகட்டத்திலும்கூட கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மக்களுடைய நிதியை எல்லாம் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆதாரங்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஒன்றும் தவறில்லை.
அந்த வகையில்தான் தற்போது உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயமாக ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் - மூத்த விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்