நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் www.tnjfu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இளநிலை பட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் விவரங்களை வெளியிட்டார்.
இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு மூன்று கல்லூரிகளிலும், பி.டெக். பட்டப்படிப்பு நான்கு கல்லூரிகளிலும், இளநிலை வணிக மேலாண்மை ஒரு கல்லூரியிலும் மற்றும் இளநிலை தொழில்நுட்பவியல் படிப்பு நான்கு தொழில்சார் கல்லூரிகளிலும் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு 386 இடங்கள் கொண்ட பத்து இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணைய வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு வரும் ஏழாம் தேதி தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். பொது கலந்தாய்வானது இணையதளம் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதள கலந்தாய்வு வரும் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான 2020-2021 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (நவ. 01 ) முதல் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnjfu.ac.in) தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்கள் விபரங்கள் பெற்று, விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையவழி மூலமாக விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக சமர்பிக்க வரும் 27ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் அறிய pqadmission@tnjfu.ac.in என்ற மின்னஞ்சல், 04365 256430 என்ற தொலைபேசி எண் அல்லது 94426 01908 மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.