TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மயிலாடுதுறை நகராட்சி நூலகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் சிவராமன் முயற்சியால் தன்னார்வ பயிலும் வட்டம் உருவாக்கப்பட்டு, இதுவரை 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இங்கு படித்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிய, மாநில அரசு அலுவலர்களாக உருவெடுத்துள்ளனர்.
இந்நூலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட 12 வகையான போட்டித் தேர்வுகளுக்காக 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயாராகியுள்ளனர்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பு மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் 2022 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்ட தேர்வை நடைமுறைப்படுத்தினால் மாணவர்கள் தோல்வியை தழுவும் நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறையில் தேர்வு எழுதுவது தங்களுக்கு எளிமையானது என்றாலும், குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே குரூப் 4 தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டத்தை நன்கு பராமரிக்க அறிவுறுத்தல்