கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அம்பலபாரா என்ற பகுதியில் உணவு தேடி வந்த கர்ப்பிணி யானை வெடி வைத்திருந்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்டதால் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் கண்டித்து பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கேரள வனத்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவரும், யானை ஆர்வலருமான சாய் விக்னேஷ்.
கேரள வனத்துறை அமைச்சர் ராஜூவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய சாய்விக்னேஷ், யானையை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவரது அழைப்புக்கு பொறுமையாக பதிலளித்த கேரள அமைச்சர், "கேரள அரசு வழக்குப்பதிவு செய்ததுடன் யானையை கொன்றவர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் குற்றவாளிகளை கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 'அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா