மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் கடைத் தெருவில் கணேசன் என்பவர் நகை -அடகு கடை நடத்திவருகிறார். நேற்று (நவம்பர் 23) வழக்கம்போல் இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று (நவம்பர் 24) விடியற்காலையில் கடையின் ஷட்டர் அறுக்கப்பட்டுள்ளதாக கணேசனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடை சென்று கணேசன் பார்த்தபோது ஷட்டரை வெல்டிங் எந்திரத்தால் ஆள் நுழையும் அளவிற்கு வெட்டி எடுத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து கணேசன் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். கதவை அறுக்கும்போது ஷட்டர் அருகே உள்ள கண்ணாடி உடைந்து கொள்ளையரின் மீது ரத்த காயத்தை ஏற்படுத்தியதால் கடையின் வாசலில் ரத்தம் சிந்தியுள்ளது.
கதவை அறுப்பதற்கு தேவையான மின்சாரத்தை பக்கத்து செருப்புக்கடையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிந்திய ரத்தத்தை கொள்ளையன் பேப்பரில் துடைத்துள்ளார். செருப்புக்கடையில் மின் ஒயரை எடுக்கச்சென்றபோது அங்கேயும் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. ஷட்டரை அறுப்பதற்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் வந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவை பார்த்த நபர் அதையும் உடைத்துள்ளார்.
இதுகுறித்து பெரம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே லைன் பக்கம் உள்ள ஆற்றின் ஒரத்தில் ஷட்டரை அறுக்க உதவிய எந்திரம் கிடந்துள்ளதாகவும் அங்கும் ரத்தம் சிந்தியிருப்பதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் துறையினர் மயிலாடுதுறை பகுதிகளில் யாரேனும் கழுத்து அல்லது கைகளில் ரத்த காயத்திற்கு சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையருக்கு ரத்த காயம் ஏற்பட்டதால் கொள்ளை முயற்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் கடையிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பியது.