நாகை மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடி முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை, மாரியம்மாள் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளைபோயிருந்தன.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளை போன சிலைகள், திருக்குவளை அருகே உள்ள ராமன்கோட்டகம் கிராமத்தில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் ராமன் கோட்டகம் காலனி தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது வீட்டை சுற்றிவளைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அங்கு, சாக்கு மூட்டையில் மூன்று சிலைகள் இருப்பதைக் கண்ட காவல் துறையினர் உடனடியாக அதனை கைப்பற்றினர். பின்பு சிலைகளை பதுக்கி வைத்திருந்த வேதாரண்யம் மறைஞாயநல்லூரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரை கைது செய்தனர். மேலும் கொள்ளை போன மற்ற சிலைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றது.
கைப்பற்றப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் எனவும் இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.