நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோயில் கருவறையிலிருந்து பழமை வாய்ந்த நான்கு உலோக சிலைகள் கடந்த மாதம் 14ஆம் தேதி திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இது தொடர்பாக வேதாரண்யம் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டைச் சேர்ந்த லோகஸ்வரன்,உதயராஜன், சதாசிவம் ஆகியோரை கடந்த 21ஆம் தேதி கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு (வள்ளி,தெய்வானை) உலோக சிலைகள் மீட்கப்பட்டன.
மேலும் திருடுவதற்கு பயன்படுத்திய இண்டிகோ காரையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். நீதிமன்ற காவலில் எடுத்து மீதமுள்ள இரண்டு சிலைகளை மீட்க அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேலும் சிலருக்கு இச்சிலைக் கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
அதனடிப்படையில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டைச் சேர்ந்த கிருபாகரன் மற்றும் ராமன் கோட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரை கைது செய்து மீதமுள்ள இரண்டு( அம்மன்,முருகன்) சிலைகள் மீட்கப்பட்டன.
திருடப்பட்ட நான்கு சிலைகளின் மதிப்பு சுமார் ரூபாய் 40 லட்சத்திலிருந்து 45 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.