கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளன.
மணல்மேடு, பெரம்பூர், கடக்கம், வில்லியநல்லூர், வழுவூர், இலுப்பூர், சங்கரன்பத்தல் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க கட்டடம் இல்லாததால் வெட்டவெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவால் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் போதிய தொழிலாளர்கள் இல்லாததாலும், லாரிகள் இயங்காததாலும், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்துச் செல்ல துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.