வேதாரண்யம் அருகே, தோப்புத் துறை பேருந்து நிறுத்தத்தில் கியூ பிரிவு குற்றப்புலனாய்வு காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி அங்கு நின்றுகொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்துள்ளனர். அதில் அந்நபர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சீருழில் ஒழுங்கை பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (எ) பார்த்திபன் (40) என்று தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில், அவர் இலங்கையைச் சேர்ந்த இருவருடன் படகில் பருத்தித் துறை கடற்கரையிலிருந்து இந்தியாவுக்கு கஞ்சா கடத்தியதாகவும், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர்களிடமிருந்து, தப்பிக்க கடலில் குதித்து வேதாரண்யம் மணியன் தீவிற்கு வந்ததாகவும் தெரிகிறது.
அவர் மீது அயல்நாட்டு கடவுச்சீட்டு இல்லாமல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த காரணத்திற்காக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து கியூ பிரிவு காவல் துறையினர் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.