நாகை: நாகை துறைமுகத்திலிருந்து கடந்த 11ஆம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன், சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டை சமந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இருபத்து மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படை நாகை மீனவர்களின் விசைப்படகைச் சுற்றிவளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளைப் பறிமுதல்செய்து, படகில் இருந்த 23 மீனவர்களைக் கைதுசெய்தனர்.
இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து கைதுசெய்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும், படகையும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கரோனா பரிசோதனைக்குப் பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அலுவலர்களின் வசம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இலங்கையில் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு அந்நாட்டு அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : ஆந்திர இளைஞர்களிடம் 1.50 கோடி ரூபாய் பறிமுதல்