மயிலாடுதுறை: சில தினங்களுக்கு முன்பு சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கு காவல் துறையினர் துணைபோவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், சாராய வியாபாரி சாராய வியாபாரத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்களிடம் அனுமதி கேட்டு நடத்துவதாக கூறியதால், பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
அதில், சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் கவிதா கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போனதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, உடனடியாக சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் கவிதாவுக்கு கீழ் பணிபுரிந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 பேரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 16 பேர் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.