தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய, அரசு நேரம் ஒதுக்கி உள்ளது. தொடர்ந்து அரசு தடை காலத்தை நீட்டிக்கொண்டு செல்வதால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் கடைகளின் முன்பு கூட்டம் அதிகளவில் உள்ளது. தொற்று பரவமால் இருக்க கடை உரிமையாளர்கள் கடைகள் முன்பு, தரைகளில் இடைவெளிவிட்டு, சுண்ணாம்பு வளையம் போட்டு வைத்து பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் அனைத்து வகையான முன்னேற்பாடுகளுடன் வியாபாரம் செய்து வருகின்றனர். இதையும் மீறி, கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனைக் காவல் துறை கட்டுப்படுத்தாமல் இருந்து வருகிறது. கடையின் முன்பு கூட்டம் உள்ளதாகக் கூறி, வருவாய்த்துறையினர் கடைகளின் உரிமையாளர்களை மிரட்டியும், கடைகளுக்குச் சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்ததையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இதனைக் கண்டித்து சீர்காழி நகராட்சிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடை உரிமையாளர்கள், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் துறை மக்களின் அத்தியாவசியத் தேவைகளை வழங்கிவரும் கடை உரிமையாளர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்வதையும், கடைகளுக்குச் சீல் வைக்கும் வருவாய்த் துறையையும் கண்டித்தும், கடையடைப்புப் போராட்டம் நடத்துவதாகக் கூறினர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை கரோனா விழிப்புணர்வு ஓவியம் கழுகுப் பார்வையில்