மயிலாடுதுறை: சின்னமேடு மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 300 பேர் ஃபைபர் படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக, சின்னமேடு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாகியுள்ளது.
இதனால் இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் தற்போது கடற்கரையில் இருந்து மீனவர்கள் வசித்து வரும் குடியிருப்புப் பகுதி 50 மீட்டர் தொலைவில் இருப்பதால், எந்த நேரத்திலும் கடல் சீற்றத்தால் கிராமம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் அரிப்பால் சேதமடைந்து வருகிறது.
இதனால் டிராக்டர் மூலம் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் எடுத்துச்செல்கின்றனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, சின்னமேடு கிராமத்தில் கல் சுவர் அமைக்கும் பணி சுமார் ரூ.9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்தப் பணி கடந்த அக்டோபர் மாதமே முடிவடைய வேண்டிய நிலையில், தற்போது வரை முழுமையாக நிறைவடையாததால், அதிக அளவில் கடல் அரிப்பால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இந்த கல் தடுப்புச் சுவரை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: அடித்துச்செல்லப்பட்ட வீடுகள் - பொதுமக்கள் சாலை மறியல்