நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தமிழரசன். இவரது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார்.
நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கவிதா, உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டின் பின்புறமுள்ள கொல்லைப் புறத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் கவிதாவை காணாமல் போனதாக எண்ணி அக்கம்பக்கம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர்.
பின்னர், தோட்டத்தின் பின்புறமுள்ள பகுதியில் கவிதா மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கவிதாவை சீர்காழி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, திருவெண்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கவிதாவின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், கவிதாவின் உடலில் கீறல்கள், காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : கழுத்து அறுபட்ட நிலையில் தொழிலாளி உடல் மீட்பு!