நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மிகவும் பழமைவாய்ந்த தேவாரப்பாடல் பெற்ற மயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால், மயிலாடுதுறை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மயிலாடுதுறை நகரத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
கடந்த வாரம் கீழமடவிளாகம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் மயூரநாதர் கோயிலின் குளத்தில் புகுந்ததால் நான்கு படிகள் வரை நீர்மட்டம் உயர்ந்தது. இதனையறிந்த நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை கழிவுநீர் உடைப்பை சரிசெய்தனர். தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடுவதற்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும் கோயில் நிர்வாகத்தினர் தடை விதித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு போர்வெல் மூலம் குளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றினர். குளத்தில் உள்ள மீன்களை பிடிக்காமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் குளத்தில் இருந்த மீன்கள் இறந்தன. மீன்களைச் சுற்றி புழுக்கள் மொய்ப்பதால் இரண்டு நாட்களாக கடும் துர்நாற்றம் வீசிவருகிறது.
இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி வசிப்பவர்களும் இதனால் பாதிப்படைந்துவருகின்றனர். மேலும் கோயில் உள்ளே துர்நாற்றம் வீசுவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக கோவில் நிர்வாகம் இறந்துபோன மீன்களை அப்புறப்படுத்தி பக்தர்கள் நீராடுவதற்கு சுத்தமான தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: எழுதலிலும் மறைதலிலும் சிவனை வணங்கும் கதிரவன் - பாண்டியர் கால குடைவரைக் கோயிலின் அற்புதம்!