அயோத்தியில் ராமர் கோயில் கட்ட விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் தொடங்கப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த ஆதீனமான தருமபுரம் ஆதீனத்தில் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், விஸ்வஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள், அமைப்பினர், பக்தர்கள் கலந்துகொண்டு, முதற்கட்ட நிதியாக ரூ.1.60 லட்சத்தை தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் கூறுகையில், "அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்ப பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் நிதி அளித்து, பெரிய அளவில் கோயில் எழுப்பப்பட வேண்டும்.
இக்கோயிலை தனிப்பட்ட முறையில் தனவந்தர்களால் எழுப்ப முடியும் என்றபோதிலும், ஒவ்வொருவரின் வியர்வையும், ரத்தமும், அன்பும் அங்கு செங்கற்கற்களாக கோயிலை கட்ட அமைய வேண்டும். அதற்கு அனைத்து மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
இது 500 ஆண்டுகளுக்குக் பிறகு 75 போராட்டங்களில் நான்கு லட்சம் பேர் உயிரிழந்தப் பின்னர் நீதிமன்றத்தின் மூலம் கிடைத்த மாபெரும் வெற்றி. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் இது கிடைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தமிழ்நாட்டில் நிதி சேகரிப்பு தருமபுரம் ஆதீனத்தில் இருந்து தொடங்கப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க... ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூல்: பாஜகவை விமர்சிக்கும் திக்விஜய் சிங்!