நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, குத்தாலத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, சட்டத்திற்கு புறம்பாக கடைகளில் போதை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்ததுடன், 3 கடைகளுக்கு சீல் வைத்து, ரூ.75 அபராதம் விதித்தனர். தொடர்ந்து டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 60 பேர் அடங்கிய போலீசார் சாதாரண உடையில் சென்று குட்கா விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறை, நீடுர், மாப்படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 22 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நகராட்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதேபோல், குத்தாலத்தில் ஏ.ஆர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுதராணி தலைமையில் சோதனையில் ஈடுபட்டு 4 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர். தொடர்ந்து பல்வெறு கடைகளில் மெகா சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: உட்கட்சி தேர்தல்; திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை