நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள உழவர் தெரு மற்றும் சிவன் கோவில் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு தனி சுடுகாடு வேண்டும் எனக்கூறி கடந்த ஆறு ஆண்டுகளாக நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இவர்களின் இந்தக் கோரிக்கைக்கு, எவ்வித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இன்று அதே பகுதியைச் சேர்ந்த சித்தானந்தம் என்ற முதியவரின் இறந்த உடலை வடக்கு பொய்கை நல்லூர் சித்தர் கோவிலின் எதிரே சாலையில் கிடத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நாகை-வேளாங்கண்ணி உட்புற சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் உழவர் தெரு, சிவன் கோவில் தெருவாசிகளுக்கு தாசில்தார் பிரான்சிஸ் வடக்கு பொய்கைநல்லூர் ஆற்றங்கரையோரம் சுடுகாடு இடம் தேர்வு செய்து அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் கைவிட்டனர்.
இதையும் படிங்க: நான்கு புறமும் புதுச்சேரி எல்லை... நடுவில் வசதிகளின்றி தவிக்கும் தமிழக கிராமம்