சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழா ஒன்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
அதனையடுத்து, 2020-2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்று வந்தபோது, எதிர்க்கட்சியினர் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதாவை இந்த கூட்டத்தொடரிலேயே பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு எதிர்க்கட்சி ஒட்டுமொத்தமாக ஆதரவு வழங்கும் என்றும் கூறியிருந்தனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் தெரிவித்தாவது, ‘இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா மாவட்டங்களை அறிவிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதை நாகை கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மேலும் இந்த மசோதாவானது விரைவில் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் 11 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்படும். இதனை நம்பி இருக்கும் 6 லட்சம் சிறுகுறு விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும். வேளாண்மையை உயர்த்தும் வகையில் இந்தப் பகுதிகளில் அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்’ என்றார்.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை தமிழ்நாட்டின் பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூகநல இயக்கத்தினா் வரவேற்றுள்ளனா்.
இதையும் படிங்க: 'முடிவெடுக்க பிரதமர் மோடிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது' - முத்தரசன்