மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தரங்கம்பாடி தாலுகாவில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டமும், பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளரை, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது.
இதில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் கலந்துகொண்டு, பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரும் மாவட்டச் செயலாளருமான எஸ்.பவுன்ராஜை, அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் அரசியல் உலகமே இந்த ஆட்சி நீடிக்காது எனக் கூறியது. ஆனால் அதனை எதிர்கொண்டு அனைத்து சவால்களையும் சமாளித்து, ஆட்சி நடத்துவதில் தாயையும் மிஞ்சிய பிள்ளை என்று பெயரெடுத்துள்ளார். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மா ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்ற ஆசை தமிழ்நாடு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியால் திமுக ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட சட்டம் நீட் என்பதை நாங்கள் மறந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டு, அதிமுக நீட் தேர்வை எதிர்க்கவில்லை என்று கூறுகின்றனர். ஓடுகிற திருடன், திருடனைப் பிடி திருடனைப் பிடி என அவனே கூறிக்கொண்டு ஓடுவதுபோல் திமுகவினர் ஓடுகின்றனர்.
கடந்தாண்டு அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் 6 பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தனர். இதைக் கருத்தில் கொண்ட முதலமைச்சர், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு பயில 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதால் இந்தாண்டு அரசுப்பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்கள் 312 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
அவர்களின் கல்வி செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 450 ஆக நிச்சயம் உயரும் என்றார். 2 ஏக்கரில் நிலம் தருகிறேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்து மக்களை ஏமாற்றிய கட்சி திமுக. தற்போதும் பொய்யான தேர்தல் அறிக்கையின் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு காண்பது இயற்கையானது. திமுகவின் கனவு பலிக்காது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய மாஜி அமைச்சர் வாக்குமூலம்!