மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்க பணம் ஆகியவை சிறப்பு பரிசு தொகுப்பாக அனைத்து நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 407 ரேஷன் கடைகளில் உள்ள 2 லட்சத்து 81 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கரும்புகள் பயிரிடப்பட்டுள்ள கரும்புத் தோட்டங்களில் மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர் தலைமையில் உயர் அலுவலர்கள் குழுவினர் நேற்று (ஜன.3) ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயபால், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது கரும்பை சுவைத்து பார்த்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இணை இயக்குநர் சேகர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் 15 லட்சம் கரும்புகள் விளைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் மாவட்டம் முழுவதும் பரவலாக 2.81 லட்சம் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார். மேலும், மற்ற மாவட்டங்களுக்கும் கரும்பு தேவைப்பட்டால் இங்கிருந்து கொள்முதல் செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிரஷர் உரிமையாளர்கள் உண்ணாவிரதம் வாபஸ்