நாகப்பட்டினம்: வேதாரண்யம் அடுத்த முனாங்காடு பகுதியில் காற்று நிரப்பக் கூடிய ரப்பர் படகு கரை ஒதிங்கி நின்றுள்ளது. இதை, அப்பகுதி மக்கள் நேற்று (ஜூலை 25) பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளமும், 3 அடி அகலம் கொண்டதாகும். இந்த படகு சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை இந்த படகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் கியூ-பிரிவு காவல் துறையினர் ஆகியோர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தோப்புத்துறை பகுதியில் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வெளிநாட்டவர் ஒருவர் சாலையில் நடந்து வந்துள்ளார்.
அவரை சந்தேகத்தின் பேரின் வேதாரண்யம் காவல் நிலையம் அழைத்து வந்து காவலர்கள் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் போலந்து நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் வாடடிஸ்டா என்பதும் தெரியவந்தது. அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இவர் போலந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, இலங்கையிலிருந்து ரப்பர் படகு மூலம் ஜூலை 23்ஆம் தேதி மாலை வேதாரண்யத்தை அடுத்த முனாங்காடு பகுதிக்கு வந்ததாகவும், காட்டு பகுதியில் பதுங்கி இருந்துவிட்டு இரவில் கடை தெருவுக்கு வந்து சென்னை செல்ல இருந்ததாகவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட வாடடிஸ்டா வைத்திருந்த பையில், சில ஆவணங்கள் இருந்ததை கைப்பற்றியுள்ளனர். மேலும் படகில் இவர் மட்டும்தான் வந்தாரா? அல்லது இவருடன் வேறு யாரேனும் இப்பகுதிக்கு வந்து பதுங்கி உள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரை காவல் துறையினர் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நேற்றிரவு (ஜூலை 25) ஆஜர் செய்த நிலையில், வரும் ஆக. 8ஆம் தேதிவரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடற்கரையோரம் உள்ள மீனவ கிராமங்களில் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் மீனவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குருவியை குறி வைத்து வழிப்பறி: 3 பேர் கைது