நாகப்பட்டினம்: தரங்கம்பாடியில் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாவை சேர்ந்த 22 கிராம மீனவர்கள் இரண்டாயிரம் பேர் மனிதச் சங்கிலி அமைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை, அதிவேக திறன்கொண்ட சீன என்ஜின் விசைப்படகுகள் ஆகியவற்றுக்கு நிரந்தர தடைவிதிக்கக் கோரியும், அதனை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.
சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்பட்டு சிறுதொழில் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதற்கு நிரந்தர தடை கோரி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
'தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடித்த மீன்கள் கடத்தலா?' காவல் துறையினர் அதிரடி சோதனை!
இந்நிலையில், பழையாறு, திருமுல்லைவாசல், மடவா மேடு, பூம்புகார், சந்திரபாடி சின்னூர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் தடையை மீறி சுருக்குமடி வலையிலும், அதிவேக விசைப்படகுகளும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 22 சிறு தொழில் மீனவர் கிராமங்களை சேர்ந்த 2000 மீனவர்கள் தரங்கம்பாடியில் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 750 விசைப்படகுகள், நான்கு ஆயிரம் பைபர் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்த மீன்வளத்துறை இணை இயக்குநர் நடராஜனை மீனவர்கள் முற்றுகையிட்டு முழக்கங்கள எழுப்பினர். தொடர்ந்து வந்த கோட்டாட்சியர் மகாராணியை மீனவப் பெண்கள் மண்ணெண்ணெய் கேனுடன் முற்றுகையிட்டனர்.
இதனிடையே சந்திரபாடி கிராமத்தில் சுருக்குவலைக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை தாக்குவதற்காக புறப்பட்ட இளைஞர்களை, பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் தடுத்து நிறுத்த முயன்றபோது, மீனவ இளைஞர்கள் தாக்கியதில் அவர் மண்டையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
படகுகளுக்கு சீல்: அலுவலர்களை சிறைபிடித்த மீனவர்கள்
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் சம்பவ இடத்திற்கு வந்து மீனவ பஞ்சாயத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து தரங்கம்பாடியில் பதற்றமான சூழல் நீடித்தது.