நாகை மாவட்டம் திருக்குவளை, அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் தற்பொழுது சம்பா சாகுபடி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஒருசில விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தில் தங்களுக்குத் தேவையான விதைநெல்லை வாங்கினாலும்கூட, பல விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லினை தனியாரிடமே வாங்குகின்றனர்.
அவ்வாறு தனியாரிடம் வாங்கப்படும் விதை நெல்லில் கௌச்சா என்னும் பூச்சிக்கொல்லி மருந்து விதை நெல்மேல் தெளிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிக மகசூல், பூச்சிகளின் தாக்குலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் போன்ற நன்மைகளுக்காகக் கௌச்சாப் பூச்சி மருந்து கலந்த விதைநெல்லினை வாங்கி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் விதை நெல் வயலில் தெளிக்கப்பட்டவுடன், அதை உண்ண வரும் புறாக்கள், நாற்றாங்குருவிகள், தவிட்டுக்குருவிகள் ,அணில்கள் ,கோழிகள், மயில்கள் உள்ளிட்ட பல பறவைகளும், உயிரினங்களும் கௌச்சா பூச்சிமருந்தில் உள்ள நச்சுத் தன்மையால் உயிர் இழந்துவருகின்றன.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது, விடங்கலூரை சேர்ந்த விவசாயி உதயமூர்த்தி வளர்த்துவந்த புறாக்கள் உயிரிழந்துள்ளன. 50 வளர்ப்புப் புறாக்களை தனது வீட்டில் அதற்கென தனிப் பெட்டகம் அமைத்து வளர்த்துவந்த உதயமூர்த்தி, அந்தப் புறாக்களை பகலில் இரை தேடுவதற்காக வெளியேப் பறக்கவிடுவது வழக்கம். அவ்வாறு இரைத் தேடச்சென்ற புறாக்கள் அனைத்தும், அருகிலிருந்த வயலில் தெளிக்கப்பட்டிருந்த விதைநெல்லை உண்டு, சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளன.
இதனால் பதறிப்போய் அவர் பறவைகளை ஆராய்ந்தபோது, விதை நேர்த்திக்காக வயலில் கௌச்சா கலந்துத் தெளிக்கப்பட்ட விதைகளை சாப்பிட்டு புறாக்கள் இறந்தது தெரியவந்தது. தான் வளர்த்த 50 புறாக்களில் தற்போது 33 புறாக்கள் உயிரிழந்த நிலையிலும், 17 புறாக்கள் உயிருக்கு போராடிய நிலையிலும், பறக்க முடியாமலும் தவித்து வருவதால், நஷ்டத்திற்கும் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார் விவசாயி உதயமூர்த்தி.