கரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் வாங்கிச் செல்ல அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நாகையில் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பலர் ஒத்துழைப்பு அளித்தாலும் சிலர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்காமல் செயல்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் நடமாடுபவர்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆனால் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை மீறி பெட்ரோல் நிலையங்களில் விற்பனை நடைபெறுகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள 84 பெட்ரோல் நிலையங்களில் பெரும்பான்மையான பெட்ரோல் நிலையங்கள் விதிமுறைகளை பின்பற்றும் சூழலில், நாகை நகரப் பகுதியில் செயல்படும் சில பெட்ரோல் நிலையங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு எதிராக செயல்படுவதால் கரோனா தொற்று பரவும் சூழல் நிலவுவதாக பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அரசு உத்தரவை மீறி செயல்படும் பெட்ரோல் பங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா ஆபத்திலும் அயராது உழைக்கும் அலுவலர்கள்