மயிலாடுதுறை: வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 11ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டது. பல்வேறு கிராமங்கள் மழை வெள்ள நீரால் சூழப்பட்டு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் 22 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. மேலும் 3000 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
அதீத கனமழையில் 186 கால்நடைகள் உயிரிழந்தன. 87 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில் பல்வேறு கிராமங்களில் சம்பா, தாளடி பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுட்டனர்.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத்தலைவர் சிம்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் இறுதியில் விவசாயிகள் தனித்தனியாக எழுதிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர். இந்தப் போராட்டத்தால் ஏராளமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மழை பாதிப்பு ...நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலைமறியல்