நாகை மாவட்டத்தில் பசலி 1428-க்கான ஜமாபந்தி நிகழ்ச்சி ஜூன் 6ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 6 ஆயிரத்து 810 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1,216 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. இன்று குத்தாலத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றதோடு, மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவரிடம் திருநங்கைகள் மூன்று பேர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், நாகை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியதுடன், குடிநீர் குழாயில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.