மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள கொள்ளிடம் பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போய்வந்துள்ளன.
இது குறித்து இருசக்கர வாகனங்களைப் பறிகொடுத்தவர்கள் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் பாலச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் குற்றவாளியைத் தேடிவந்தனர்.
விசாரணையில் கொள்ளிடம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ராஜிவ் காந்தி என்ற இளைஞர் கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர், ராஜிவ் காந்தியைக் கைதுசெய்து அவரிடமிருந்து சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏழு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பல இருசக்கர வாகனங்கள் ராஜிவ் காந்தியும் அவரது கூட்டாளிகளும் திருடியது தெரியவந்துள்ளது. தற்போது காவல் துறையினர் ராஜிவ் காந்தியின் கூட்டாளியைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 15 அடி ஆழத்துக்கு மண் எடுத்ததால் உடைந்த பாலம்: போக்குவரத்து துண்டிப்பு