மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா கங்காதரபுரம் ஊராட்சி ஆட்டூர் கிராமத்தில் நண்டலாற்றின் குறுக்கே 1983ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் உள்ளது. கங்காதரபுரம், கொண்டங்கி, நிம்மேலி, கோவில்பத்து, பாடகச்சேரி, கற்கத்தி, கிளியனூர், ஆட்டூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களையும் திருவாரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது.
பொதுமக்களின் பிரதான போக்குவரத்திற்கு பயன்பட்டு வந்த இந்த பாலம் கடந்த ஆண்டு சேதமடைந்தது. பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்த இந்த பாலத்தின் மையப்பகுதியை தாங்கி நிற்கும் கான்கிரீட் தூணானது ஆற்றில் உள்வாங்கியதால் பாலம் "வி" வடிவத்தில் சரிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த மினி பேருந்து நிறுத்தப்பட்டது.
பேருந்து நிறுத்தப்பட்டதால் கோமல் ஊராட்சியில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நண்டலாற்றில் மழை வெள்ளநீர் வடிந்து பெருக்கெடுத்து ஓடுவதால் தற்போது பாலம் 1 அடி உள்வாங்கியுள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள் தற்காலிகமான நண்டலாற்றின் குறுக்கே நடைபாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் பொதுமக்கள், எந்நேரமும் இடித்து விழும் நிலையில் இருக்கும் பாலத்தை உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிதம்பரத்தில் தீப்பற்றி எரிந்த பேருந்து...