மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகைமங்கலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (நவ.16) பார்வையிட்டு ஆய்வுச் செய்தனர்.
பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்
அப்போது அவர்களிடம் விவசாயிகள் அழுகிய நிலையில் உள்ள பயிர்களை காண்பித்து வேதனை தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் அவர்களிடத்தில் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கன மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 175 குடும்பத்தினருக்கு அரிசி, பாய், போர்வைகள் அடங்கிய தொகுப்பினை, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் நிவாரண உதவியாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பாரதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், முக்கிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காட்பாடியில் பொதுப்பணித் துறையின் புதிய அலுவலகக் கட்டடம்: ஸ்டாலின் திறந்துவைப்பு